காஞ்சீபுரத்தில் பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகள் பறிமுதல் - குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’


காஞ்சீபுரத்தில் பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகள் பறிமுதல் - குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’
x
தினத்தந்தி 11 April 2020 4:30 AM IST (Updated: 11 April 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் மெகபூப்பாஷா(வயது 43). இவர், அதே தெருவில் உள்ள முத்தீஸ்வரர் தோட்டத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெரிய குடோன் வைத்து உள்ளார்.

கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை வாங்கி வந்து, இந்த குடோனில் பதப்படுத்தி காஞ்சீபுரத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் ஓட்டல்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு உள்ளன. மேலும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் மாலையில் காஞ்சீபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இத னால் காஞ்சீபுரம் நகரில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று இந்த இறைச்சி குடோனில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதுகுறித்து காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் ஆர்.மகேஸ்வரி, காஞ்சீபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அகிலாதேவி மற்றும் நகராட்சி சுகாதாரத்துறையினர் அந்த இறைச்சி குடோனுக்கு சென்று சோதனை செய்தனர்.

அதில் கலெக்டர் உத்தரவால் காஞ்சீபுரத்தில் உள்ள இறைச்சி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் விற்பனை செய்ய முடியாத 10 டன் கோழி இறைச்சிகளை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி, மூட்டை மூட்டையாக குளிர்சாதன பெட்டிக்குள் பதப்படுத்தப்பட்டு இருப்பதும், நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டதால் குளிர்சாதன பெட்டி செயல்படாமல் கோழி இறைச்சிகளில் இருந்து துர்நாற்றம் வீசியதும் தெரிந்தது.

இதையடுத்து குடோனில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த குடோனை பூட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அத்துடன் கிருஷ்ணன் தெருவில் உள்ள மெகபூப்பாஷாவுக்கு சொந்தமான பிரியாணி கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு முழுவதும் நகராட்சி சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.

இதுகுறித்து தனி தாசில்தார் அகிலாதேவி கூறும்போது, மெகபூப்பாஷா இந்த குடோனில் வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்த கோழி இறைச்சிகளை சுமார் 3 மாதங்களாக பதப்படுத்தி பதுக்கி வைத்து உள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள், காஞ்சீபுரம் நத்தப்பேட்டை குப்பை கிடங்குகளில் குழி தோண்டி புதைக்கப்படும். விசாரணைக்கு பிறகுதான் குடோன் உரிமையாளர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும் என்றார்.

Next Story