ஸ்ரீபெரும்புதூரில் கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்ற பீடா கடைக்காரர் கைது
ஸ்ரீபெரும்புதூரில் கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்ற வடமாநிலத்தை சேர்ந்த பீடா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித்(வயது 43). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பக்கத்தில் தங்கி, அதே பகுதியில் பீடா கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இந்திரஜித், வருமானம் இல்லாமல் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்தார்.
இதனால் அவர், வலி நிவாரணி மாத்திரை, சளி, காய்ச்சல் மாத்திரை மற்றும் இருமல் மாத்திரைகளை பொடியாக்கி அவற்றை சிறிய கவரில் போட்டு, கொரோனா வைரசுக்கு மருந்து என்று கூறி விற்றால் பொதுமக்கள் வாங்கி விடுவார்கள். அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டார்.
இதையடுத்து இந்த போலி மருந்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் பொதுமக்களிடம் கூவி கூவி விற்க தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
போலீசாரை கண்டதும் இந்தரஜித் ஓட தொடங்கினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்திரஜித்தை பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது கொரோனா வைரசுக்கு போலி மருந்து விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story