வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளனர் - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்


வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளனர் - ராமநாதபுரம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 April 2020 4:15 AM IST (Updated: 11 April 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 3400 பேர் 28 நாள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 4,777 பேர் சொந்த ஊர் வந்திருந்த நிலையில் தற்போது 28 நாட்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் 1,343 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மீதம் உள்ள 3434 பேரின் தனிமை காலம் முடிவடைந்து விட்டதால் ஊரடங்கு உத்தரவினை கடைபிடித்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் தற்போது 17 பேர் உள்ளனர். இவர்களில் 11 பேருக்கு ரத்த பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. மீதம் உள்ள 6 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் உணவுக்கு வழியின்றி தவித்து வந்தவர்கள் 786 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 290 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 200 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளில் கொரோனா வார்டு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தேவையான அளவு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story