தஞ்சை அருகே மதுபாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்க திட்டம்; பேரூராட்சி பணியாளர்கள் உள்பட 6 பேர் கைது
தஞ்சை அருகே மதுபாட்டில்களை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்க திட்டமிட்ட பேரூராட்சி பணியாளர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளப்பெரம்பூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் மதுபாட்டில்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மதுக்கடைகளில் உள்ள மதுபாட்டில்களை பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 28 மதுக்கடைகளில் இருந்து மதுபாட்டில்களை பாதுகாப்பு கருதி தஞ்சையை அடுத்த வல்லம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
சமுதாய கூடத்தின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மதுக்கடைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்கள் அடுக்கி வைத்து பின்னர் சமுதாய கூடத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இந்த நிலையில் வல்லம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய அலுவலக கட்டிடத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்த கட்டிடத்தில் வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 430 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது வல்லம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்க்கும் வல்லம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(வயது 20), பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா(20), தஞ்சையை அடுத்த பூண்டி அருகே உள்ள திருநாஇருப்பை சேர்ந்த பிரகதீஸ்வரன்(23), வல்லம் நல்லதண்ணி கிணறு பகுதியை சேர்ந்த மணிவேல்(24), வல்லம் கால்வாய்மேடு பகுதியை சேர்ந்த தினேஷ்(25) மற்றும் சென்னம்பட்டி சாலை பகுதியை சேர்ந்த குணா(28) ஆகிய 6 பேரும் சேர்ந்து மதுபாட்டில்களை வல்லம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்துக்கு இடமாற்றம் செய்ய வந்த டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கி வெளியே கள்ளச்சந்தையில் விற்க திட்டமிட்டு, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கண்ணன், ராஜா, பிரகதீஸ்வரன், மணிவேல், தினேஷ், மற்றும் குணா ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த மதுக்கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை விற்க பேரூராட்சி பணியாளர்கள் திட்டமிட்டதும், அவர்களுக்கு டாஸ்மாக் ஊழியர்களே உதவியதும் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மதுபாட்டில்கள் சமுதாய கூடத்தில் இருப்பதை அறிந்த மதுபிரியர்கள் பலர், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் குவிந்தனர். அவர்களை வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன் மற்றும் போலீசார் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு வெளியே ஒருவர் பையில் மதுபாட்டில்களை மறைத்து எடுத்து வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுத்துறையை சேர்ந்த பழனி(45) என்பதும், அவர் தஞ்சை பாலாஜி நகரில் உள்ள மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவர் கடையில் இருந்து மது பாட்டில்களை வல்லத்துக்கு இடமாற்றம் செய்தபோது மதுபாட்டில்கள் சிலவற்றை விற்பனைக்காக திருடி வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே வல்லம்-மருத்துவக்கல்லூரி சாலை அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வேன் ஒன்று நின்று கொண்டிருந்ததை கவனித்தனர். அந்த வேனை போலீசார் சோதனை செய்தபோது அதில் 140 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து வேன் டிரைவர் தஞ்சை கீழவாசலை சேர்ந்த பெத்துராஜ்(27) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை கீழவாசலில் உள்ள மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். வல்லம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்குவது அதிகரித்து இருப்பதால் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story