ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அரிசி வாங்க காத்திருந்த பொதுமக்கள்


ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அரிசி வாங்க காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 April 2020 4:00 AM IST (Updated: 11 April 2020 9:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அரிசி வாங்க பொதுமக்கள் காத்திருந்தனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால், மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அரிசி, மசாலா வகைகள், கோதுமை மற்றும் அரிசி மாவு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தானிய வகைகள் போன்றவற்றை மொத்த வியாபாரிகள் வெளியிடங்களில் இருந்து வாங்கி வந்து ஊட்டியில் உள்ள குடோன்களில் வைத்து உள்ளனர்.

அவ்வாறு கொண்டு வரும் போது, குடோன்களில் அடுக்கி வைப்பதற்காக மொத்த விற்பனை கடைகளுக்கு ஓரிரு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால் அங்கு மளிகை பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து திரும்பி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகள் மளிகை பொருட்களை வாங்கினாலும், அதை கொண்டு செல்ல வாகனங்கள் கிடைப்பது இல்லை.

இதனால் அவர்கள் தங்களது வாகனங்களில் கொண்டு செல்லும் அளவுக்கு மட்டுமே வாங்குகின்றனர். சில இடங்களில் மளிகை பொருட்கள் விலை உயர்ந்து உள்ளது. கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனை கடைகள் திறக்காததால், உயர் ரக அரிசி மூட்டைகளை வாங்க மக்கள் தேடி அலைகின்றனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையில் அரிசி வாங்க காலை முதலே மக்கள் கூட்டம், கூட்டமாக வர தொடங்கினர்.

நுழைவுவாயில் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காத்து நின்றனர். ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் 1 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நிற்குமாறு தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் சம்பவ இடத்துக்கு சென்று மக்கள் கூட்டமாக சேரக்கூடாது என்று கூறி கூட்டத்தை கலைத்தார். அதன் பின்னர் மொத்த வியாபாரியிடம், தினமும் 10 பேருக்கு டோக்கன் அடிப்படையில் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்க வேண்டும். நோய் தொற்றை பரப்பும் வகையில் கூட்டம் கூடினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அரிசி மூட்டைகளை வாங்கி சென்றனர். 

Next Story