ஆட்களை அழைத்து செல்ல முடியாததால் சின்ன வெங்காயம் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் வேதனை
ஆட்களை அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், சின்ன வெங்காயம் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல்லில் விளையும் சின்ன வெங்காயம், பல மாநிலங்களுக்கு மட்டுமின்றி அண்டை நாடான இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, சின்ன வெங்காயத்துக்கு எப்போதும் நல்ல விலை கிடைத்து வருகிறது.
இந்த ஆண்டும் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிட்டுள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், சீலப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் பல பகுதிகளில் சின்ன வெங்காயம் விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வெளியே வருவது குறைந்தது. அதேநேரம் விவசாய பணிகளுக்கு அரசு விலக்கு அளித்தது. எனினும், சின்ன வெங்காயம் அறுவடைக்கு ஆட்களை வாகனத்தில் அழைத்து செல்ல முடியவில்லை. மேலும் விவசாய வேலைக்கு வருபவர் களின் விவரங்களை முன்கூட்டியே தரும்படி அதிகாரிகள் வற்புறுத்துவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக திண்டுக்கல் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் ஒரு சில விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து விளைந்த சின்ன வெங்காயத்தை பிடுங்கி குவித்து வைத்துள்ளனர். ஆனால், அவற்றை தனியாக பிரித்து எடுக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை. எனவே, வேலை ஆட்கள் கிடைக்காததால் பிடுங்கிய சின்ன வெங்காயம் வயல்களிலேயே கிடக்கிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையில் நனைந்து சின்ன வெங்காயம் அழுக தொடங்கி விட்டது.
எனவே, விவசாயிகளின் நலன்கருதி சின்ன வெங்காய அறுவடைக்கு ஆட்களை அழைத்து செல்வதில் நிலவும் சிக்கல்களை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story