திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகள் - சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல கோரிக்கை
திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 49 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றது. அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் விவசாயிகள் வசதிக்காக மாவட்டம் முழுவதும் 463 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அந்தந்த பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் பொதுவினியோக திட்டத்தில் அரிசியாக வழங்க நெல் மூட்டைகள் அரவைக்காக மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதி உள்ள நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் நெல் கொள்முதல் பணிகள் நிறைவு நிலையை எட்டியது.
தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து சற்று தடைப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் பல கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் உள்ளது.
இதனால் சுமார் 200-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. ஒரு கொள்முதல் நிலையத்தில் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் வரை நெல் தேங்கி கிடக்கிறது. இதனால் நெல் மூட்டைகளை பாதுகாப்பது அந்தந்த கொள்முதல் நிலைய ஊழியர்களின் பொறுப்பாக உள்ளது. எனவே கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை உடனியாக லாரி்கள் மூலம் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story