புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 April 2020 1:27 PM IST (Updated: 11 April 2020 1:27 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இது அமலில் உள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் 4 பேருக்கும், மாகியில் 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மாகியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டார். 71 வயது முதியவர் அரசு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். புதுவையில் பாதிக்கப்பட்ட 4 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர் களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவண்டார்கோவில் மற்றும் மூலக் குளம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களையும் சேர்த்து புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வசித்து வந்த திருவண்டார்கோவில், மூலக் குளம் அன்னை தெரசா நகர் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வசிப்பவர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அந்த பகுதியில் உள்ள வீதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் முகாமிட்டு வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மூலக்குளம் பகுதிக்கு சென்று நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது போலீஸ் ஐ.ஜி. சுரேந்திர சிங் யாதவ், துணை கலெக்டர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்

இதேபோல் கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோரும் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர்.

Next Story