நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலசரக்கு கடைகளில் 12 வகையான மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பலசரக்கு கடைகளில் 12 வகையான மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
நெல்லை,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் சாலையில் நடமாடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தடை உத்தரவு எதிரொலியாக காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அதேவேளை மளிகை கடைகளிலும் பொருட்களின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பலசரக்குக் கடைகளில் 12 வகையான மளிகை பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மளிகை பொருட்கள்
இதனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே மசாலா பொடி பாக்கெட்டுகள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள்.
உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் ஏராளமான கடைகளில் கிடைப்பதில்லை. நறுமணப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவது இல்லை. எப்போது என்ன பொருட்கள் கேட்டாலும், ‘இப்போது இல்லை, சரக்கு வந்ததும் தருகிறேன்’, என்பதே பெரும்பாலான கடைக்காரர்களின் தற்போதைய பதிலாக இருந்து வருகிறது.
பொதுமக்கள் புகார்
அந்த அளவுக்கு கடைகளில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக நெல்லை டவுனை சேர்ந்த வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஆர்.குணசேகரன் கூறியதாவது:-
முன்புபோல மொத்த வியாபாரிகளிடம் இருந்து சரக்குகளை பெற முடிவதில்லை. பொருட்களை வாங்க நாங்களே வண்டி எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் சொல்லும் விலையும் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. இதனால் குறைவான அளவிலேயே பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். நெல்லை, தென்காசிக்கு மதுரை, சேலம், கரூர் ஆகிய ஊர்களுக்கு சென்று பொருட்களை வாங்கி வரவேண்டி உள்ளது. முன்பு ரெகுலர் சர்வீஸ் லாரி மூலம் பொருட்களை அனுப்பி வைப்பார்கள். ஆனால் தற்போது நாங்களே நெல்லையில் இருந்து லாரியை அனுப்பி வைப்பதால் 2 மடங்கு வாடகை ஆகிறது. நெல்லை டவுனில் மொத்த கடைகளின் அருகில் லாரிகளை அனுமதிக்க மறுப்பதால் அதனை 3 சக்கர வண்டிகளில் கடைகளுக்கு எடுத்துச்செல்வதால் இறக்குவதற்கான கூலி 3 மடங்கு ஆகிறது. இது பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது.
தற்போது கோதுமை மாவு, புளி, ரவை, சேமியா, கடுகு, சீரகம், உளுந்து, பாமாயில் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மற்ற பொருட்களும் 4 நாட்களுக்குத்தான் ஓரளவுக்கு இருப்பு உள்ளது. அதன்பிறகு மளிகை பொருட்கள் இல்லாத நிலை உருவாகும். எனவே, தடை உத்தரவு எந்த அளவில் இருந்தாலும் பாதுகாப்புடன் உற்பத்தியை தொடங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மளிகை பொருட்கள் தட்டுப்பாட்டை போக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story