நெல்லை மாநகராட்சியில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 10 குழுக்கள் அமைப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நெல்லை மாநகராட்சி பகுதியில் தகுந்த காரணம் இல்லாமல் வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை டவுன் வழுக்கோடை முதல் பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி வரையும், பழைய பேட்டை பகுதி முழுவதும் கண்காணிக்க நெல்லை கோட்ட கலால் அலுவலர் சங்கர் தலைமையிலும், நெல்லை டவுன் பகுதிகள் முழுவதும் கண்காணிக்க மானூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோமதிசங்கரநாராயணன் தலைமையிலும், தச்சநல்லூர், தாழையூத்து மற்றும் உடையார்பட்டி பகுதிகளை கண்காணிக்க வருவாய் நீதிமன்ற உதவி கலெக்டர் அலுவலக கண்காணிப்பாளர் சுப்பு தலைமையிலும், நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளை கண்காணிக்க பறக்கும் படை தாசில்தார் ராஜீ தலைமையிலும், பாளையங்கோட்டை மார்க்கெட், பஸ்நிலையம், சமாதானபுரம் பகுதிகளை கண்காணிக்க கனிமம் மற்றும் சுரங்க அலுவலக துணை தாசில்தார் செந்தில் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய பஸ்நிலையம் பகுதி
பாளையங்கோட்டை மகாராஜநகர், ஐகிரவுண்டு பகுதிகளை கண்காணிக்க நெல்லை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், சாந்திநகர், ரகுமத்நகர், கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம் பகுதிகளை கண்காணிக்க பறக்கும் படை துணை தாசில்தார் குமார் தலைமையிலும், அன்புநகர், பெருமாள்புரம் பகுதிகளை கண்காணிக்க அம்பை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பிரபாகர் அருள்செல்வம் தலைமையிலும், என்.ஜி.ஓ காலனி, பெருமாள்புரம், புதிய பஸ்நிலையம் பகுதிகளை கண்காணிக்க மாவட்ட தேர்தல் பிரிவு துணை தாசில்தார் விஜய்ஆனந்த் தலைமையிலும், தியாகராஜநகர், புறவழிச்சாலை பகுதி முழுவதும் கண்காணிக்க நெல்லை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரியப்பன் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் ஒரு வாகனத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று கண்காணிப்பார்கள். இவர்களுக்கு ஊரடங்கு உத்தரவினை செயல்படுத்துவதற்கும். சட்டம் ஒழுங்கை பராமரித்திடவும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அப்போது விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் உடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குள் அவர்கள் எடுத்த நடவடிக்கை விவரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு அலுவலக மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story