ராமநாதபுரத்தில் பங்குத்தந்தைகள் மட்டும் பங்கேற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
ராமநாதபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தைகள் மட்டும் பங்கேற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையொட்டி பாம்பனில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நேற்று மாலை 6.30 மணி அளவில் சிறப்பு திருப்பலி தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பங்கு தந்தைகள் மட்டும் பங்கேற்றனர். ஆலய பங்குத்தந்தை பிரிட்டோஜெயபால் தலைமையில் நடந்த திருப்பலி பூஜை 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
கொரோனா வைரஸ் அழியவும், அந்த வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நலமடைய வேண்டியும் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. இந்த திருப்பலி பூஜையில் உதவி பங்குத்தந்தை ரிச்சர்ட் மற்றும் அருட் சகோதரிகள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
பங்கு இறை மக்கள் யாரும் இல்லாமல் முதல் முறையாக இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற அதே நேரத்தில் வீட்டில் இருந்தபடியே பங்கு இறைமக்கள் பிரார்த்தனை செய்தனர். இதேபோல் தீவு பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் மக்கள் இல்லாமல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஈஸ்டர் பண்டிகையை உறவினர்களோடு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாததால் கிறிஸ்தவ மக்கள் மனவேதனை அடைந்தனர். இதேபோல ராமநாதபுரம் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்திலும் ஈஸ்டர் திருப்பலியை பங்குத்தந்தைகள் மட்டும் நடத்தினர்.
இதேபோல் மதுரை புதூர் லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று இரவு ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது பங்குத்தந்தை தாஸ் கென்னடி மட்டும் திருப்பலியை நடத்தினர்.
Related Tags :
Next Story