கோயம்பேட்டில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்கள் திருட்டு - போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
கோயம்பேட்டில் டாஸ் மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங் களை திருடிய மர்மநபர்கள், ரோந்து போலீசாரை கண்டதும் சில மதுபான பெட்டிகளை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பூந்தமல்லி,
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. குடிபோதைக்கு அடிமையான சிலர் எப்படியாவது குடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்தும், சுவரில் துளை போட்டும் திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் தினமும் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் டாஸ்மாக் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் நோட்டுகளில் கையெழுத்து போட்டுவிட்டு கடையை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேடு ரெயில் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள நோட்டில் கையெழுத்து போடுவதற்காக ரோந்து போலீசார் சென்றனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததுடன், கடையின் வெளியே 7 அட்டை பெட்டிகளில் மதுபான பாட்டில்கள் இருப்பதும் தெரிந்தது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். அப்போது ரோந்து போலீசார் வருவதை கண்டதும், 7 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களை மட்டும் அங்கேயே வைத்து விட்டு சென்றதும் தெரிந்தது.
போலீசார் குறித்த நேரத்தில் வராவிட்டால் கடையில் உள்ள அனைத்து மதுபாட்டில்களையும் கொள்ளையடித்து சென்று இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை கோயம்பேடு போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story