கொரோனா தாக்கியதாக பயந்து வாலிபர் தற்கொலை - நாசிக்கில் பரிதாபம்
கொரோனா வைரஸ் தாக்கியதாக பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாசிக்,
உலகம் முழுவதும் மரணத்தின் மீதான பயத்தை உருவாக்கி உள்ளது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். இந்த கொடிய நோய்க்கு உயிரிழப்பு அதிகரித்து வரும் வேளையில், கொரோனா பாதித்ததாக பயந்து போய் நாசிக்கில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்த விவரம் வருமாறு:-
நாசிக் செகேடி பகுதியை சேர்ந்தவர் பிரதிக் ராஜூ குமாவத்(வயது31). பிளம்பரான இவர், தொண்டை நோயால் பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் பிரதிக் ராஜூ குமாவத் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கருதினார். இதனால் கடந்த சிலநாட்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கொரோனா அச்சம் காரணமாக நேற்று தனது வீட்டு உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் தன்னை கொரோனா தாக்கியதாக கருதுவதால், தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் பிரதிக் ராஜூ குமாவத்தின் சளி மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாசிக் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story