தளர்த்தக்கூடாது என பிரதமர் அறிவுரை: கர்நாடகம் முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
ஊரடங்கை தளர்த்தக்கூடாது என்ற பிரதமரின் அறிவுரையை ஏற்று கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.
பெங்களூரு,
கொரோனாவை தடுப்பது குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நடத்திய ஆலோசனையில் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய எடியூரப்பா, கர்நாடகத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா பரவி வருவது குறித்தும், அது சமூகத்தில் பரவும் ஆபத்து இருப்பது குறித்தும் பிரதமர் மோடி மிகுந்த கவலை தெரிவித்தார். அதிகம் பாதித்துள்ள பகுதிகளை சீல் வைத்து மூடுவது மற்றும் மாநிலங்கள் எடுத்துவரும் தேவையான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நாம் அனைவரும் ஒற்றுமையாக போராடினால் மட்டுமே இந்த போரில் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறினார்.
பரிசோதனை மையங்கள்
நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா பரவும் விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக குறைந்துள்ளது என்று மோடி தெரிவித்தார். நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த 142 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது என்றும் அந்த பகுதிகளில் தீவிரமான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
இதுவரை 2.84 லட்சம் உடல் கவச உடைகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி 2 நாட்களுக்கு ஒரு முறை 2 லட்சம் முகக்கவசங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார். நாட்டில் தற்போது 220 கொரோனா பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் 15 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
1 லட்சம் பேருக்கு...
இந்த மாத இறுதிக்குள் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்படும். மே 31-ந் தேதிக்குள் தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும். மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஊரடங்கு உத்தரவை இன்னும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அறிவுரை வழங்கினார்.
நகரங்களில் சிக்கியுள்ள கூலித்தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பாமல், அங்கேயே தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மீன்பிடி தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். விவசாயத்துறை, தொழில்துறைக்கு படிப்படியாக விலக்கு அளிக்கப்படும். கள்ள சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
வழிகாட்டுதல் வெளியிடப்படும்
மத்திய அரசு உருவாக்கியுள்ள ஆரோக்கிய சேது செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்ய மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து முன்எச்சரிக்கையாக இருக்க முடியும். எக்காரணம் கொண்டும் ஊரடங்கு உத்தரவை தளர்த்தக்கூடாது. இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வந்துள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். அடுத்த 15 நாட்களில் ஊரடங்கு உத்தரவை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஓரிரு நாளில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.
அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதிக்கப்படும். கொரோனாவை தடுப்பது தொடர்பாக நான் கூறிய சில ஆலோசனைகளை பிரதமர் ஏற்றுக் கொண்டார். அடுத்த 3, 4 வாரங்கள் 130 கோடி மக்களுக்கு மிக முக்கியமான காலக்கட்டம் என்றும், இந்த நேரத்தில் தான் நாம் மேற்கொண்ட முயற்சிகள் என்னவாகும் என்பது தெரியும். ஒருவேளை நிலைமை மோசமானால் அதை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாது. கொரோனாவை தடுக்கும் பணியில் மாநிலங்களுடன் மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடகத்தை பொறுத்தவரையில் இன்று(அதாவது நேற்று) புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மொத்தம் இதுவரை 209 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 6 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் கூறினேன். தொடக்கத்தில் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கார்நாடகம் 3-வது இடத்தில் இருந்தது. தற்போது 11-வது இடத்தில் இருக்கிறோம்.
கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு 2 வாரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மிக தீவிரமாக அமல்படுத்தப்படும். பெங்களூருவில் மட்டும் 345 சோதனை சாவடிகளும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 588 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 43 ஆயிரத்து 432 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 1,558 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,682 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ அவசர தேவை
தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கர்நாடகம் வந்த 50 வெளிநாட்டினரை கண்டுபிடித்து தனிமைபடுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளோம். கர்நாடகத்தை சேர்ந்த 581 பேர் பிற மாநிலங்களில் உள்ளனர். அவர்களை பற்றி அந்தந்த மாநிலங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பெங்களூரு உள்பட நகர பகுதிகளில் 273 ரோந்து வாகனங்கள், பொதுமக்களின் மருத்துவ அவசர தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.”
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story