நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் உள்ளது - கலெக்டர் தகவல்


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் உள்ளது - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 April 2020 10:30 PM GMT (Updated: 12 April 2020 2:16 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் இருப்பதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டி,

டெல்லி சென்று நீலகிரி திரும்பிய 8 பேரும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி முடிவில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி முடிவுகள் இன்று மாலை(அதாவது நேற்று) தெரியவரும்.

மற்ற 4 பேருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்து, 15-வது நாளில் ரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. முதல் 14 நாட்களில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. தற்போது பாதிப்பு இருப்பதால் மீண்டும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி, ரத்தம், சளி மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி காந்தல் பகுதியில் 2 பேர், குன்னூரில் 2 பேர், கோத்தகிரியில் 3 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்று(அதாவது நேற்று முன்தினம்) ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, எஸ்.கைகாட்டி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. 3 கிராமங்களில் மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சீல் வைக்கப்ப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரவும் கூடாது, உள்ளே யாரும் செல்லவும் கூடாது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் நிலையில் உள்ளது. டயாலிசிஸ் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் வசதி இருக்கிறது. கூடலூர், பந்தலூரில் புற்றுநோய், இதயம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் டாக்டரிடம் சான்றிதழ் பெற்று கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அம்மா மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்கள் என்ன தேவைப்படுகிறது என்று ஆய்வு செய்யும்.

தேயிலை தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது. காந்தல், ராஜாஜி நகர், கடைவீதி பகுதி, எஸ்.கைகாட்டி ஆகிய 4 தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் 440 குழுக்கள் ஈடுபட்டு உள்ளது. நீலகிரியில் தற்போது 314 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story