வியாபாரிகள் வாங்க வராததால் வயல்களிலேயே அழுகி வீணாகும் தர்பூசணிகள் - விவசாயிகள் வேதனை
வியாபாரிகள் வாங்க வராததால் வயல்களிலேயே தர்பூசணிகள் அழுகி வீணாகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள இறவாங்குடி, படநிலை, காடுவெட்டி, பாப்பாக்குடி, இளையபெருமாள் நல்லூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட கிராமங்களில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தர்பூசணிகள் ஜனவரி மாதம் முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் இங்கு வந்து தர் பூசணிகளை வாங்கி வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய அனுப்பி வைப்பார்கள்.
இந்த ஆண்டும் மீன்சுருட்டி பகுதியில் தர்பூசணி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி மாதத்தில் வெளிமாவட்ட வியாபாரிகள் வந்து, தர்பூசணிகளை வாங்கிச்செல்ல தொடங்கினர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் வெளிமாவட்ட வியாபாரிகள் தர்பூசணி வாங்க வரவில்லை. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், தர்பூசணி பழங்களை பறிக்காமல் வயல்களிலேயே விட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிர் செய்ய சுமார் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு சுமார் 15 முதல் 20 டன் வரை தர்பூசணி கிடைக்க வேண்டும். ஆனால் பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல் ஆகியவற்றால் இந்த ஆண்டு சுமார் 5 டன் முதல் 10 டன் வரை மட்டுமே தர்பூசணி உற்பத்தியானது. கடந்த ஆண்டு கிலோ ரூ.7 முதல் ரூ.12 வரை தர்பூசணிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே தர்பூசணி கிலோ ரூ.8-க்கு வாங்கினார்கள். ஆனால் தற்போது கிலோ ரூ.1-க்கு கூட வாங்க ஆள்இல்லை.
இதனால் மீன்சுருட்டி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் வயல்களிலேயே அழுகி வீணாகிறது. எனவே எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story