ஊரடங்கை மீறுபவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த இடவசதியின்றி போலீசார் திணறல்
ஊரடங்கை மீறுபவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த இடவசதியின்றி போலீசார் திணறி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மக்கள் அலட்சியமாக மீறி வீதிகளில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட், வேதாரண்யம் சாலை, திருவாரூர் சாலை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். சோதனை சாவடிகளில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரூபாதேவி, தேவதாஸ் ஆகியோர் உள்பட ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடி வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் எங்கு செல்கிறீர்கள்? எதற்காக செல்கிறீர்கள்? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் போலீசார் அவர்களுடைய வாகனங்களையும் பறிமுதல் செய்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 450-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 410 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் குவிவதால் இடநெருக்கடி ஏற்பட்டு, போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்த போலீசார் திணறி வருகிறார்கள்.
மேலும் போலீஸ் நிலையத்துக்குள் செல்வதற்கே சிரமம் ஏற்பட்டு இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். நோயில் இருந்து காப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை பொதுமக்கள் முறைப்படி கடைபிடிக்க வேண்டும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story