கும்பகோணத்தில் செல்போன் கோபுரத்தில் திடீர் ‘தீ’ - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதம்


கும்பகோணத்தில் செல்போன் கோபுரத்தில் திடீர் ‘தீ’ - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதம்
x
தினத்தந்தி 12 April 2020 4:00 AM IST (Updated: 12 April 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில், செல்போன் கோபுரத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின் சாதனங்கள் சேதம் அடைந்தது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் ஒலிமுகமது. இவருக்கு சொந்தமான 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் கும்பகோணம் துக்காம்பாளைய தெருவில் உள்ளது.

இதில் உள்ள அறைகளில் 30-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி மாறன் தலைமையிலான தீயணைப்பு நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் கொழுந்து விட்டு எறிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த செல்போன் கோபுரம் வழியாக 5 ஆயிரம் செல்போன்களுக்கு இணைப்புகளை அளிக்கும் எந்திரங்கள் சேதமடைந்தது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், குளிர்சாதன எந்திரங்களில் ஏற்பட்ட அதிக மின் அழுத்தம்தான் தீ விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story