சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் 4 நவீன கிருமி நாசினி தெளிப்பு எந்திரங்கள்


சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் 4 நவீன கிருமி நாசினி தெளிப்பு எந்திரங்கள்
x
தினத்தந்தி 12 April 2020 1:21 PM IST (Updated: 12 April 2020 1:21 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு ரூ.15 லட்சத்தில் 4 நவீன கிருமி நாசினி தெளிப்பு எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து பாரத மிகுமின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 4 நவீன எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அந்த எந்திரங்களை நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து சேலம் சூரமங்கலம் ரெட்டியூர் பகுதியில் நவீன எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், ஜி.வெங்கடாஜலம் எம்.எம்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இதையடுத்து அந்த எந்திரங்களை கொண்டு பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சேலத்தில் உள்ள தற்காலிக உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை பகுதிகளான மளிகைக் கடைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் ஆகிய பகுதிகளில் தினமும் வாகனங்கள் மூலமாகவும், கைக்தெளிப்பான்கள் மூலமாகவும் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி முதல் இதுவரை 30 நாட்களில் 4 லட்சம் லிட்டர் கிருமி நாசினி கொண்டு 68 கைத்தெளிப்பான்கள், 15 எந்திர தெளிப்பான்கள் மற்றும் 4 லாரிகள் மூலம் மாநகர் பகுதிகள் முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் அன்புசெல்வி, சுகாதார அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story