கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 2,371 வாகனங்கள் பறிமுதல் - போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வழக்கில் 2,371 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறினார்.
கிருஷ்ணகிரி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கையொட்டி பணியாற்றி வரும் போலீசாரை ஊக்கப்படுத்தும் வகையிலும், கிருஷ்ணகிரியில் பணியாற்றி வரும் போலீசாருக்கு ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பினர், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது முதல் தொடர்ந்து 3 வேளை உணவை இலவசமாக அளித்து வருகின்றனர். அத்துடன் தனி நபர்களும், இப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பழச்சாறு, பழம், காபி, டீ போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி டவுன், கிருஷ்ணகிரி தாலுகா, மகாராஜகடை, குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி டேம், காவேரிப்பட்டணம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சுமார் 300 போலீசாருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, ராயக்கோட்டை மேம்பாலம் ஆகிய இடங்களில் நடந்தது.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் தலைமை தாங்கி 300 போலீசாருக்கும், தலா 10 கிலோ அரிசி, பருப்பு வகைகள் 2 கிலோ, மைதா மற்றும் கோதுமை மாவு 2 கிலோ, உப்பு ஒரு கிலோ, வெங்காயம் 1 கிலோ, சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் என வீட்டு சமையலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையை வழங்கி, போலீசாரை வாழ்த்தி பேசினார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,671 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,371 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு காவலர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் சட்டத்தை மதித்து, போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் (கிருஷ்ணகிரி டவுன்), சுரேஷ்குமார் (கிருஷ்ணகிரி தாலுகா), கணேஷ்குமார் (மகராஜகடை), வெங்கடாசலம் (காவேரிப்பட்டணம்), ரஜினி (குருபரப்பள்ளி) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story