ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வேளாண் விளைபொருட்கள் நாளை முதல் பெறப்படும் - கலெக்டர் அருண் தகவல்


ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வேளாண் விளைபொருட்கள் நாளை முதல் பெறப்படும் - கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 12 April 2020 2:26 PM IST (Updated: 12 April 2020 2:26 PM IST)
t-max-icont-min-icon

தட்டாஞ்சாவடி, கூனிச்சம்பட்டு, மதகடிப்பட்டு, மடுகரை, கரையாம்புத்தூர், கன்னியக்கோவில் ஆகிய 6 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் வேளாண் விளைபொருட்கள் பெறப்படும் என கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கொரோனா தொற்று நோய் பரவுதலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்ட 6 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு நேற்று 22 பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். 6 பேர் வெளிப்புற சிகிச்சை நோயாளிகளாக பரிசோதிக்கப்பட்டனர்.

அவரச அழைப்பு எண் 104-க்கு நேற்று 73 அழைப்புகள் வந்தது. இதில் 21 நபர்களுக்கு மனநல மருத்துவர், ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினர்.

புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, கூனிச்சம்பட்டு, மதகடிப்பட்டு, மடுகரை, கரையாம்புத்தூர் மற்றும் கன்னியக்கோவில் ஆகிய 6 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் வேளாண் விளைபொருட்கள் பெறப்பட உள்ளன. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சந்தை கட்டணம் செலுத்துதல் மற்றும் வணிக உரிமங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு புதுச்சேரியில் இருந்து அரவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தபடியே படிப்பை தொடரும் வகையில் 569 கல்லூரி ஆசிரியர்கள் இணையதளம் மூலம் கல்வி கற்பித்துள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story