ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் - மீனவர்கள் வலியுறுத்தல்
ஊரடங்கால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. மீன்பிடி தொழிலும் முடங்கி உள்ளது. அனைத்து படகுகளும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆனால் விசைப்படகு மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். இதனால் தடை உத்தரவு முடியும் நேரத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கி விடுவதால் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விசைப்படகு தொழிலாளர் நலச்சங்க தலைவர் ஜான்சன் கூறியதாவது:-
வாழ்வாதாரம் பாதிப்பு
கடும் மழை என்றாலும், காற்று என்றாலும் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான். தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலை மட்டும் நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல மாதங்களாக தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதி கோரி கடலுக்கு செல்லாமல் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் பலர் தங்களது படகுகளை விற்பனை செய்து விட்டனர்.
தடை காலம் ரத்து
தற்போது தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணத்தொகை ரூ.1,000 போதுமானதாக இல்லை. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தடை கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் வருகிற 15-ந் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது. இதனால் மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story