சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜப்பானுக்கு 2 சிறப்பு விமானங்கள் - 344 பேருடன் புறப்பட்டு சென்றன


சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜப்பானுக்கு 2 சிறப்பு விமானங்கள் - 344 பேருடன் புறப்பட்டு சென்றன
x
தினத்தந்தி 13 April 2020 4:21 AM IST (Updated: 13 April 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து அமெரிக்கா, ஜப்பானுக்கு 344 பேருடன் 2 சிறப்பு விமானங்கள் புறப்பட்டு சென்றன.

ஆலந்தூர், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்து செல்லவும் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தங்கள் நாடுகளுக்கு திரும்பிச்செல்ல முடியாமல் பரிதவித்தனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகள், சுற்றுலா பயணிகளை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சிறப்பு விமானத்தில் அழைத்துச்செல்ல மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

அதன்படி கடந்த சில தினங்களாக சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, இங்கு தவித்த அந்த நாட்டு சுற்றுலா பயணிகள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு மும்பை வழியாக சிறப்பு விமானம் சென்றது. இந்த விமானம் சென்னையில் இருந்து 96 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. அங்கு மேலும் அமெரிக்கர்களை அழைத்துச்செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து ஜப்பானுக்கு 248 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.


Next Story