அரசின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள்: வயிறு எரிச்சலின் உச்சக்கட்டமாக தான் ஸ்டாலினின் அறிக்கை இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அரசின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள்: வயிறு எரிச்சலின் உச்சக்கட்டமாக தான் ஸ்டாலினின் அறிக்கை இருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 13 April 2020 4:30 AM IST (Updated: 13 April 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

அரசின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. அவருடைய வயிறு எரிச்சலின் உச்சக்கட்டம் தான் அவரின் அறிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், திருக்கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், உயிரியல் பூங்காக்கள் 16.3.2020 முதல் மூடப்பட்டுவிட்டன. அன்றைய தினம் முதல் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டது.

அதேநாளில் சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அவருக்கு தகுந்த விளக்கம் அரசால் தரப்பட்டது. ஆனால் மு.க.ஸ்டாலின் அன்றையதினம் மாலையிலேயே சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரம் பேர் கூடி இருந்த கூட்டத்தில் பேசினார். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கூட்டங்கள் நடந்தது. சட்டமன்றத்துக்கு வந்தால் கொரோனா பரவும். பொதுக்கூட்டத்தில் கொரோனா பரவாதா? இதுதான் ஸ்டாலினின் பாணி. தி.மு.க.வினர் தான் நோய்த்தொற்று பரவ காரணமாக இருந்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

முதல்-அமைச்சர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே இந்த நோயை தடுக்க வேண்டும் என்ற நிலையில், பொது சுகாதார சட்டத்தின் கீழ் இதை தொற்று நோயாக அறிவித்தார். அதுமட்டுமில்லாமல், அவர் தலைமையில் வைரஸ் தொற்று தடுப்பு குறித்து 7 முறை மூத்த அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடந்து இருக்கிறது.

இதுதவிர காணொலி காட்சி மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொண்டு நோய் தடுப்பு குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டார். நோய் தடுப்பு பணிக்காக அரசு செயலாளர் அந்தஸ்தில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றனர்.

அதேபோல், 19 பேர் மருத்துவக்குழுவினருடனும் ஆய்வு மேற்கொண்டார். நம்முடைய தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ.3,280 கோடி மதிப்பில் நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏதாவது ஒரு தவறை கண்டுப்பிடிக்கலாம் என்று அவர் பார்க்கிறார். மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் கூட எங்களுடைய அரசில் தவறை கண்டுபிடிக்க முடியாது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தடுப்பு பணி முதல்-அமைச்சர் தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது. இதனை எல்லோரும் பாராட்டுகிறார்கள். மத்திய சுகாதாரத்துறையே நம்மை பாராட்டியுள்ளது. இது ஸ்டாலினுக்கு தெரியாதா?.

சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பேட்டி கொடுக்காமல் தலைமை செயலாளர் பேட்டி கொடுப்பதால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன வருத்தம்?. நாட்டு மக்களுக்கு அரசு செய்வது சென்றடைகிறது. தலைமை செயலாளர் அனைத்துத் துறைகளின் தலைமை நிர்வாக அதிகாரி, ஒரு துறை சார்ந்த தகவல் என்றால் ஒரு துறையின் செயலாளர் தகவல் கொடுக்கலாம். ஆனால் பல துறை சார்ந்த தகவல் என்றால், தலைமை செயலாளர் தான் பதில் சொல்லவேண்டும்.

ஊரடங்கை அறிவித்ததில் இந்தியாவுக்கே நாம் தான் முன்னோடி. காணொலி காட்சியில் பிரதமரிடம் பேசியபோது, முதல்-அமைச்சர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறினார். ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என அப்போது பிரதமர் கூறி இருக்கிறார். ஊரடங்கை இந்தியா முழுவதும் பின்பற்றினால்தான் நோயை கட்டுப்படுத்த முடியும், இது அடிப்படையான விஷயம். ஆகவே அந்த ஊரடங்கு உத்தரவை பிரதமர் அறிவிப்பது தான் சாலச் சிறந்தது.

எங்களை பொறுத்தவரையில், முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. அவருடைய வயிறு எரிச்சலின் உச்சக்கட்டம் தான் அவரின் அறிக்கையாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story