ஊரடங்கு உத்தரவு நீடித்து உள்ள நிலையில் பெங்களூருவில் எடியூரப்பா திடீர் நகர்வலம் - வியாபாரிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்


ஊரடங்கு உத்தரவு நீடித்து உள்ள நிலையில் பெங்களூருவில் எடியூரப்பா திடீர் நகர்வலம் - வியாபாரிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 13 April 2020 5:56 AM IST (Updated: 13 April 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் திடீரென நகர்வலம் மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள், பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். .

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 226 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்த பகுதிகளில் அனைத்து சாலைகளும் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் வெளியே வரவும், வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதை கருத்தில்கொண்டு, மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து நேற்று முன்தினம் எடியூரப்பா அறிவித்தார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகளின் மனநிலையை அறிந்துகொள்ளவும், ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றியும் எடியூரப்பா முடிவு செய்தார். இதற்காக அவர் பெங்களூரு மாநகரில் நகர்வலம் செல்ல திட்டமிட்டார்.

அதன்படி நேற்று மாலை முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்டார்.

பனசங்கரி 3-வது ஸ்டேஜ், கொரகுன்டேபாளையா, சும்மனஹள்ளி சிக்னல், ஜெயதேவா சந்திப்பு, பத்மநாபநகரில் உள்ள தேவேகவுடா பெட்ரோல் விற்பனை நிலையம், யஷ்வந்தபுரம், விஜயநகர், கத்ரிகுப்பே, கோவிந்தராஜ்நகர், நாகரபாவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காய்கறி, பழ வியாபாரிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

நிலைமை சரியாகிவிடும்

விஜயநகரில் பழ வியாபாரிகளிடம் பேசிய எடியூரப்பா, விற்பனை எப்படி உள்ளது, எங்கிருந்து பழங்களை கொள்முதல் செய்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பழ வியாபாரிகள், கிராமங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக கூறினர். மேலும், கொரோனா பிரச்சினையால், வியாபாரம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும், தினமும் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆனதாகவும், இப்போது அது ரூ.1,500 ஆக குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த எடியூரப்பா, இன்னும் சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று கூறிவிட்டு அங்கிருந்து அடுத்த கடைக்கு சென்றார். அதற்கு முன்பு அவர் 500 ரூபாய் கொடுத்து வாழை பழங்களை வாங்கினார்.

பாஸ்கள் வழங்க கோரிக்கை

பிறகு அருகில் இருந்த வெங்காய கடைக்கு வந்தார். அங்கு வியாபாரியிடம் பேசிய எடியூரப்பா, வெங்காயத்தை எங்கிருந்து வாங்கி வருகிறீர்கள் என்றார். அதற்கு யஷ்வந்த புரத்தில் இருந்து வாங்கி வருவதாகவும், போலீசார் தொந்தரவு கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

உடனே எடியூரப்பா, அங்கிருந்து போலீஸ் அதிகாரியை அழைத்து, இந்த வியாபாரிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாதவாறு பாஸ்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பழ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

போலீசாருக்கு உத்தரவு

அதன் பிறகு யஷ்வந்தபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் எடியூரப்பா பேசினார். அப்போது, தேவையின்றி வாகனங்களில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த நகர்வலத்தின் போது எடியூரப்பா சில பகுதிகளில் கூடியிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர், ஊரடங்கு உத்தரவை அனைவரும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

முதல்-மந்திரியின் நகர் வலத்தின்போது, நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட போலீஸ் அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Next Story