மார்க்கெட் இயங்காது என வதந்தி, பொதுமக்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்கிய வியாபாரி
திருப்பத்தூர் பஸ் நிலைய தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை (இன்று) முதல் இயங்காது என நேற்று அறிவிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் வியாபாரி ஒருவர் தனது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
திருப்பத்தூர்,
கொரோனா வைரஸ் காரணமாக திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி வந்தனர். இந்த நிலையில் நாளை (இன்று) முதல் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்காது என நேற்று அறிவிக்கப்பட்டதாக வதந்தி பரவி உள்ளது.
இதனையொட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடைவைத்திருந்த ஒருவர் தனது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகளை மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இலவசமாக வழங்கினார். இதனை அறிந்த பொதுமக்கள் அந்த கடையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். கூட்டம் அதிகமாக கூடியதால் போலீசார் அங்கு வந்து காய்கறி விற்க தடை விதித்தனர். இருந்த போதிலும் அங்கு இருந்த பொதுமக்கள் காய்கறிகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்
இன்று (திங்கட்கிழமை) முதல் காய்கறிகடைகள்இயங்க எந்தவித தடையும் விதிக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story