விழுப்புரத்தில், ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்


விழுப்புரத்தில், ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்
x
தினத்தந்தி 13 April 2020 3:45 AM IST (Updated: 13 April 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ரெயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரசால் தனிமைப்படுத்தவர்களுக்கு என தனியாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ரெயிலில் உள்ள 10 பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி 10 பெட்டிகளிலும் ரெயில்வே சுகாதார குழுவினர் மூலம் படுக்கை, கழிப்பறை மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பரிசோதனை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் ரெயில் பெட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து விழுப்புரம் ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தான் இந்த 10 பெட்டிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 16 பேர் தங்குவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகளில் 160 பேர் தங்கி சிகிச்சை பெறலாம். ஒவ்வொரு பெட்டியிலும் தலா 2 கழிவறைகள் 2 குளியலறைகள் மற்றும் ஒவ்வொரு படுக்கையும் அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இது கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். மேலும் பெட்டிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் கொரோனா சிறப்பு மருத்துவமனையான விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.

Next Story