மீன்களை ஏலம் விடக்கூடாது; விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி - நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை


மீன்களை ஏலம் விடக்கூடாது; விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி - நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை
x
தினத்தந்தி 13 April 2020 3:30 AM IST (Updated: 13 April 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

மீன்களை ஏலம் விடக்கூடாது, விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடு என மத்திய அரசு கடுமையான நிபந்தனைகளுடன் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் வேதனையில் உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, கழுமங்குடா, காரங்குடா, அடைக்கத்தேவன், மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேஷபுரம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் கிளாஸ் படகு, பாரம்பரிய நாட்டுப்படகு என 4,500 படகுகள் உள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒரு மாதமாக நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு கடும் நிபந்தனைகளுடன் நாட்டுப்படகு மீனவர்களை மீன்பிடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை, ஏலக்கூடங்களில் ஏலம் விடக்கூடாது. ஏலக்கூடங் களில், மீனவர்கள் கூட்டம் கூடக்கூடாது. பிடித்து வரும் மீன்களை அந்தந்த கிராமங்களில் உள்ள வியாபாரிகளிடமே விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகளிடம், மீன்களை காலை 7 மணிக்குள் விற்று முடித்துவிட வேண்டும். அதற்கு மேல் வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படும் மீன்களை பறிமுதல் செய்வதுடன் படகு உரிமம் ரத்து செய்யப்படும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் குழு அமைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். மீன் இறங்கு தளங்களில் மீன்களை விற்பனை செய்யக்கூடாது. மீன்பிடி தொழிலுக்கு செல்லும் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கரைக்கு வரவேண்டும். நிபந்தனைகளை மீறும் படகுகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர்கள் முக கவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும். வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதித்துள்ள இந்த கடுமையான நிபந்தனைகளால் மீனவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘வெளியூர் வியாபாரிகள் வந்தால்தான் மீன் நஷ்டம் இன்றி விற்பனை செய்ய முடியும். இந்த நிலையில் உள்ளூர் வியாபாரிகளுக்கு மீன்களை விற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. காலை 7 மணிக்குள் மீன்களை வியாபாரிகளுக்கு விற்க வேண்டும் என்று நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பது கடினம். இதுபோன்ற கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழில் செய்ய முடியுமா? என்ற குழப்பத்தில் உள்ளோம்’ என்றனர்.

Next Story