திருத்துறைப்பூண்டியில், மளிகை கடைகளை இன்று திறக்க முடிவு - பேச்சுவார்த்தையில் உடன்பாடு


திருத்துறைப்பூண்டியில், மளிகை கடைகளை இன்று திறக்க முடிவு  - பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 13 April 2020 4:15 AM IST (Updated: 13 April 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் மளிகை கடைகளை இன்று (திங்கட்கிழமை) திறக்க வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சமூக விலகலை கடைபிடிக்க கூறி போலீசார் காட்டிய கெடுபிடி காரணமாக மளிகை கடைகளை மூடுவதாக வியாபாரிகள் அறிவித்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் கடைகள் மூடப்பட்டன. நேற்றும் கடைகள் பூட்டியே கிடந்தன. இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன், வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின்போது தாசில்தார், ‘மளிகை கடை முன்பு பந்தல் அமைத்து சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும்’ என்று கூறினார். மளிகை கடைகள் முன்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் உறுதி அளித்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் மளிகை கடைகளை திறக்க முடிவு செய்து இருப்பதாக வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் கூறினார்.

Next Story