கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 119 ஆக உயர்வு


கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 119 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 April 2020 1:26 PM IST (Updated: 13 April 2020 1:26 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வீட்டு கண்காணிப்பில் 1,689 பேர் உள்ளனர்.

கோவை,

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரலலை தடுக்க மத்திய- மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிதது வருகிறது. அதுபோல் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் மற்றும் பரவல் சற்று அதிகமாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக இருந்தது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 22 பேரில் கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கும் பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதேபோல் கோவை உக்கடத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், 14 வயது சிறுவன், 36 வயது பெண், 4 வயது சிறுமி, 70 வயது மூதாட்டி, தெற்கு உக்கடத்தை சேர்ந்த 36 வயது பெண் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கரும்புக்கடையை சேர்ந்த 42 வயது ஆண், குனியமுத்தூரை சேர்ந்த 61 வயது ஆண், 29 வயது வாலிபர், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 52 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த 3 பெண்களும், ஒரு சிறுவன் உள்பட 3 ஆண்கள், பொள்ளாச்சியில் 3 பெண்களும், ஒரு ஆணும், ஆனைமலையில் ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெண் குழந்தைகள் உள்பட 13 பேர் பெண்கள், சிறுவர்கள் உள்பட 9 பேர் ஆண்கள். இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வடமாநில சேர்ந்த 6 பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் அந்த பகுதியே சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த வடமாநிலத்தினர் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்தபோது இந்த தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் வடமாநிலத்தினர் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் உறவினர்கள் உள்பட பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .

இதுதவிர கவுண்டம்பாளையம், உக்கடம், பொள்ளாச்சி பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடங்கள் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று மற்றும் அறிகுறி இருப்பதாக கருதப்படும் 224 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது போல் 1,689 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தாக்கத்தில் மாநில அளவில் கோவை மாவட்டம் 2-வது இடத்தை பெற்றுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உள்ள பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடு, வீடாக காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது என்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோரின் உத்தரவின்பேரில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story