கொரோனா தொற்று பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 4 பேர் அனுமதி - 21 பேர் வீட்டில் தனிமையாக இருக்க டாக்டர்கள் உத்தரவு
கொரோனா தொற்று பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மேலும் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் வீட்டுத்தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர்.
நாகர்கோவில்,
உலக நாடுகளை அலற வைக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு மக்களை கொத்து கொத்தாக விழுங்கும் கொடிய அரக்கனாக மாறியுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களாக 15 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் உள்பட அவருடைய குடும்பத்தினர் 6 பேர், தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், அவருடைய மனைவியும் என 2 பேர், நாகர்கோவில் டென்னிசன் தெரு, தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவர் என 2 பேர், மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சென்னை விமான நிலைய ஊழியர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர் என 5 பேர் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பரிசோதனை முடிவுகளில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என வந்தது. அதற்கு முந்தைய நாள் இரணியல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒரு பெண் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ஆனாலும் அவருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்ததையடுத்து அவருடைய உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விமான நிலைய ஊழியருக்கு முதலில் சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 10 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. டாக்டர் உள்ளிட்ட சிலருக்கு பரிசோதனை முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) தெரியவரும்.
இந்தநிலையில் நேற்று சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் அனைவரும் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதுதவிர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்த அதாவது நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் சந்தேகத்தின் பேரில் தங்களை பரிசோதனை செய்து கொள்வதற்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களுடைய சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து நெல்லைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story