கூடலூர் அருகே பயங்கரம்: விவசாயி அடித்துக் கொலை - உறவினர் கைது


கூடலூர் அருகே பயங்கரம்: விவசாயி அடித்துக் கொலை - உறவினர் கைது
x
தினத்தந்தி 13 April 2020 2:47 PM IST (Updated: 13 April 2020 2:47 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே விவசாயியை அடித்துக் கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

தேனி மாவட்டம் கூடலூர் பசும்பொன் நகரை சேர்ந்தவர் தவசி (வயது 75). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஏகலூத்து வண்டிப்பாதை பகுதியில் உள்ளது. இங்கு அவர் வாழை சாகுபடி செய்துள்ளார். இவரது தோட்டம் அருகே மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (55) என்பவருக்கு சொந்தமான இலவ மர தோப்பு உள்ளது.

இந்தநிலையில் கணேசன் தோப்பில் உள்ள இலவ மரங்களின் கிளைகள், தவசி வாழை தோட்டத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இலவ மர கிளைகளை வெட்டுமாறு தவசி தெரிவித்துள்ளார். இதன்காரணமாக தவசிக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 2 பேரும் புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்துக்கு தவசி நடந்து சென்றார். ஏகலூத்து சாலை பிரிவு 18-ம் கால்வாய் பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக கணேசனும் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் தவசியின் தலையில் தாக்கி விட்டு தப்பியோடினார்.

இதில் நிலைகுலைந்து போன தவசி, அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணேசனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தவசி, கணேசனின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story