பொதுமக்களுக்கு வழங்க திருபுவனை தொழிற்பேட்டையில் தயாராகி வரும் நிவாரண பொருட்கள் - ‘பேக்கிங்’ பணிகள் தீவிரம்


பொதுமக்களுக்கு வழங்க திருபுவனை தொழிற்பேட்டையில் தயாராகி வரும் நிவாரண பொருட்கள் - ‘பேக்கிங்’ பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 April 2020 3:19 PM IST (Updated: 13 April 2020 3:19 PM IST)
t-max-icont-min-icon

திருபுவனை தொழிற்பேட்டையில் பொதுமக் களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்கள் ‘பேக்கிங்’ செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருபுவனை,

சீனாவில் உருவான ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கை கடைபிடிப்பதன் மூலம் ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது. புதுவை மாநிலத்தை பொருத்தமட்டில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து புதுவை மக்களை பாதுகாக்கும் பணியில் அரசு நாள்தோறும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஊரடங்கு இருந்தபோதிலும் மக்களை பாதுகாக்கும் பணியில் சுகாதாரம், பொதுப்பணி, காவல் என அனைத்து துறைகளும் துடிப்புடன்செயல்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள விழுப்புரம், கடலூர் பகுதி மக்கள் புதுவைக்குள் நுழைய முடியாத வகையில் மாநில எல்லைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. மேலும் புதுவையில் பாதிக்கப்பட்ட 6 பேர் வசிக்கும் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டும், அப்பகுதிக்குள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் வைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கி பணியாளர்கள், தபால்காரர்கள் மூலம் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நீட்டிப்பு இருக்கும் பட்சத்தில் அரிசி மற்றும் பருப்பு வகைகள் மத்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது.

இதற்காக திருபுவனையில் உள்ள பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்களை கொண்டு அரிசி, பருப்புகள் பேக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியில் புதுச்சேரி குடிமை பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள், இந்திய உணவுக்கழகத்தின் மேற்பார்வை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மற்றும் பருப்புகளை ஏற்றி சென்று மாநிலம் முழுவதும் இலவசமாக வினியோகம் செய்ய புதுவை சாலை போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 25 பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திருபுவனை, திருவண்டார்கோவில் ஆகிய ஊர்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் வசித்து வந்த தெருக்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக் குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிவாரணம் ஏற்றி செல்ல வந்த பஸ்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்பு உணவு பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். 

Next Story