கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்த வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தல்
கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்துமாறு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தாக்கம் 3-ம் கட்டத்துக்கு செல்லாமல் கட்டுப்படுத்தும் பொருட்டு முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி அரசு ஆஸ்பத்திரிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் காரணமாக நோய் பாதிப்புள்ளவர்களை சமுதாயத்தில் இருந்து எளிதில் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தனிமைப்படுத்துவதால் சமுதாயத்தில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. தற்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட நோய் அறிகுறி உள்ளவர்களும், கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளவர்களும் மேற்குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில் அரசின் இலவசமாக மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்த வேண்டும்.
மாதிரி எடுக்கும் மையம்
கொரோனா அறிகுறிகள் இல்லாமல் கூட நோய் தொற்று இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அவ்வாறு நோய் தொற்று உள்ளவர்கள் பிறருக்கு நோயை பரப்ப வாய்ப்புள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய வரும் நபர்கள் அனைவருக்குமே நோய் தொற்று இருப்பதில்லை. எனவே 3-ம் கட்ட பரவலை தடுக்க ஒரே வழி நோய் அறிகுறிகள் உடைய அல்லது நோய் தொற்று இருப்பவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசோதனை செய்வதே. எனவே பொதுமக்கள் மாதிரி எடுக்கும் மையத்தை பயன்படுத்தி தங்களையும், சமுதாயத்தையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 04633 290548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story