மேலப்பாளையத்தில் புதிய அட்டையை காட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்கிய பொதுமக்கள்


மேலப்பாளையத்தில் புதிய அட்டையை காட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 April 2020 10:30 PM GMT (Updated: 13 April 2020 7:25 PM GMT)

மேலப்பாளையத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள், புதிய அட்டையை காட்டி அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.

நெல்லை, 

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நெல்லை மேலப்பாளையத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டது. அதில் 400 வீடுகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. அந்த வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஊர் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலப்பாளையம் பகுதியில் கிருமி நாாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர், பேட்டை பகுதியிலும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும் பொதுமக்கள் அடிக்கடி வெளியே வருகிறார்கள். இதை தவிர்க்க புதிய நிபந்தனை நெல்லை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. சிகப்பு, ஊதா, பச்சை என 3 நிறங்களில் அட்டை வழங்கப்படுகிறது.

புதன் கிழமை, சனிக்கிழமைகளில் சிகப்பு அட்டை வைத்து இருப்பவர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதேபோல் செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமைகளில் ஊதா நிறத்தில் அட்டை வைத்து இருப்பவர்களும், திங்கட்கிழமை, வியாழக்கிழமைகளில் பச்சை அட்டை வைத்து இருப்பவர்களும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். மற்ற நாட்களில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நிற கார்டுகள் மேலப்பாளையத்தில் கடந்த 10-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டது.

நடைமுறைக்கு வந்தது

நேற்று முதல் இந்த அட்டை நடைமுறைக்கு வந்தது நேற்று ஊதா நிறத்தில் அட்டை வைத்து இருந்த பொதுமக்கள் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். அவர்களின் அட்டைகளை போலீசார் சோதனை செய்தனர்.

Next Story