திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 15 பெண்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது
திருப்பூர் மாவட்டத்தில் 15 பெண்கள் உள்பட மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மக்களை நடுங்க வைத்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க தனிமைப்படுத்தி கொள்ளுவதே சிறந்த வழி ஆகும். அதனால்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் மற்றவர்களும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வரை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரியை மருத்துவ பரிசோதனை செய்ததில் மொத்தம் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் லண்டன் சென்று வந்த திருப்பூரை சேர்ந்த தொழில்அதிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று மேலும் 15 பெண்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் 79 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரை சேர்ந்த தொழில்அதிபர் நோய் குணமாகி ஏற் கனவே வீடு திரும்பி விட்டார் என்பது குறிப்பிட தக்கது.
இது குறித்து அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
திருப்பூர் காங்கேயம் ரோடு ரேணுகாநகரை சேர்ந்த 65 வயது பெண், அவினாசி தேவராயம்பாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், பல்லடம் ரோடு கே.கே.நகரை சேர்ந்த 38 மற்றும் 35 வயது பெண்கள், உடுமலை மகாபுகன் லே அவுட் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் 62 வயது பெண், தாராபுரம் நியூ மஜித் தெருவை சேர்ந்த 26 வயது பெண், மங்கலம் அவினாசி ரோடு பகுதியை சேர்ந்த 60 வயது ஆண்.
பல்லடம் பாரதிபுரத்தை சேர்ந்த 18 வயது பெண், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த 58 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமி, சாமுண்டிபுரம் சாரதாநகரை சேர்ந்த 36 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 40 வயது பெண், முதலிபாளையம் ஜீவாநகரை சேர்ந்த 15 வயது சிறுவன், சாமுண்டிபுரம் சாரதாநகரை சேர்ந்த 11 வயது சிறுமி, முதலிபாளையம் ஜீவாநகரை சேர்ந்த 30 வயது பெண், பல்லடம் பணப்பாளையம் பகுதியை சேர்ந்த 26 வயது ஆண் என மொத்தம் 15 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள் 18 பேரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி கூறியதாவது:-
திருப்பூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள் ளது. அங்கு பொதுமக்கள் செல்லவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் உள்ள மங்கலம், அவினாசி தேவாரயம்பாளையம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த பகுதிகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் தான் மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story