சந்தையில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்; நடமாடும் கடைகளை அதிகரிக்க கோரிக்கை


சந்தையில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்; நடமாடும் கடைகளை அதிகரிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 April 2020 3:00 AM IST (Updated: 14 April 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சந்தையில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தை தவிர்க்க நடமாடும் சந்தைகளை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

ஈரோடு, 

ஈரோடு பஸ்நிலையம் தற்காலிக காய்கறி மற்றும் பழங்கள் சந்தையாக மாற்றப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்ய தினசரி சந்தைக்கு படை எடுத்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது. நாள்தோறும் வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிப்பு அடைந்து இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் அரசு அறிவிக்கும் புள்ளி விவரங்கள் அரசு நிர்வாகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ஒன்று, இரண்டு என்று கணக்கை தொடங்கிய கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து நிற்கிறது. 

கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக களப்பணியாளர்களை வைத்து தேடி வருகிறார்கள். இந்தநிலையில் அரசும், அதிகாரிகளும் வேண்டிக்கொள்வது யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்பதாக இருக்கிறது.

ஆனால் தினசரி ஈரோடு காய்கறி சந்தையில் கூடும் கூட்டத்தை பார்த்தால் அப்படி வீட்டுக்குள் இருக்க வேண்டிய அவசியத்தை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லையா... இல்லை நமக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்ற அதீத நம்பிக்கையா? என்பது தெரியவில்லை.

இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனா நோயின் தாக்கம் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே இப்போதைக்கு பாதுகாப்பு என்பது அவரவர் வீடுகள்தான். வெளியில் அவ்வப்போது சென்று வருபவர்கள் வீட்டுக்குள்ளேயே தனிமையை கடைபிடிப்பது நல்லது. காரணம், நமது பகுதியில் தொற்றின் வீரியம் அதிகரிக்க தொடங்கினால் கட்டுப்படுத்த முடியாது.

பொதுமக்களை பொறுத்தவரை அரசு கூறும் பல்வேறு விஷயங்களை பின்பற்றுகிறார்கள். அது அவர்களுக்கு எளிதாக இருந்தால் ஏற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால் நிறைவேற்றுவது சற்று சிரமம்தான். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கை கழுவுங்கள் என்று கூறுகிறார்கள். சந்தை மற்றும் பொது வெளியில் இவை வழங்கப்படுவதால் தங்களுக்கு கொரோனா வராது என்று நம்புகிறார்கள். ஈரோடு பஸ் நிலையம் தற்காலிக சந்தையில் கொரோனா கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டபோது இது மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி அதன் வழியாக மக்கள் சென்று வந்தார்கள். தற்போது அதனை அரசே அகற்றி இருக்கிறது.

அரசு தங்கள் பாதுகாப்புக்காக செய்யும் நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுகிறார்கள். எனவே தனிமைப்படுத்துவதையும் அரசு தீவிரமாக நிறைவேற்ற வேண்டும். மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் அரசும், அதிகாரிகளும், கூட்டமாக வருவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தற்போது பொதுமக்கள் எதற்காக வெளியே வருகிறார்கள். ஆபரணங்கள் வாங்க வேண்டும். ஆடை வாங்க வேண்டும். சினிமா தியேட்டர் போக வேண்டும் என்று ஆடம்பரத்துக்காகவா வருகிறார்கள்?.

அரிசி வாங்க, மளிகைப்பொருட்கள் வாங்க, காய்கறி வாங்க, பழங்கள் வாங்க, பிஸ்கெட் வாங்க, பால் வாங்க, மருந்து வாங்க என்று அன்றாட அடிப்படை தேவைகளுக்கான உணவு மற்றும் மருந்து தேடி வருபவர்களே அதிகம். போலியாக வந்து ஊரைச்சுற்றிப்பார்ப்பவர்களும் இவற்றில் ஏதோ ஒன்றைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். எனவே பொதுமக்களின் வீடுகளுக்கே இந்த பொருட்கள் சென்று சேர்க்கப்படுவதுதான், அவர்கள் வெளியே வராமல் இருக்க ஒரே வழி.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், காய்கறி, மளிகை, பால், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேரும் வகையில் செய்ய வேண்டும். இது மாநகர் பகுதிகளில் சாத்தியமாகும். கிராமப்புறங்களில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பகுதியில் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்கள் வாங்கிக்கொள்வார்கள். 

தற்போதைய நிலையில் நகர்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி தேவை. பெரும்பாலான கொரோனா பாதிப்பு நகர்ப்புறத்தில் கண்டறியப்பட்டு இருக்கிறது. எனவே இங்கிருந்து கிராமப்புறங்களுக்கு தொற்று செல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவின்படி நடமாடும் காய்கறி விற்பனை அதிக அளவில் உள்ளது. ஆனால், வீதிகளில் இந்த வாகனங்கள் செல்வது தெரியவில்லை. ஒரு நாள் செல்லும் வாகனம் அடுத்த நாள் வருவதில் உத்தரவாதம் இல்லை. இதுபோன்ற காரணங்களால் பொதுமக்கள் சந்தையை தேடி வரும் நிலை உள்ளது. காலை நேரத்தில் மக்கள் சந்தைக்கு வந்து சென்றபின், நடமாடும் கடைகள் அந்த பகுதிக்கு வரும்போது வியாபாரம் ஆவதில்லை.

அதுமட்டுமின்றி, அரசின் உத்தரவை மதித்து வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும் குடும்பத்தினர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் வீதிகளில் எப்போதாவது வரும் நடமாடும் கடைகளில் இருந்து அவர்கள் விரும்பாத பொருட்களை வாங்கும் நிலை ஏற்படுகிறது. அதுவும் முறையாக வராமல் இருக்கும்போது, வேறு வழி இல்லாமல் வெளியே வந்து ஏதேனும் பொருட்கள் வாங்க முடியுமா? என்று பார்க்கிறார்கள்.

இந்த காலக்கட்டம் முடிந்து விட்டது. இனி வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவது முற்றிலும் தவிர்க்கப்பட, நடமாடும் அரிசிக்கடை, மளிகைக்கடை, மருந்துக்கடை, காய்கறி, பழங்கள் கடை, பால் கடை ஆகியவை அதிகம் ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தி, அவர்களால் முடிந்தவரை விற்பனை பொறுப்பினை ஒப்படைத்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதனால் மக்களும், வியாபாரிகளும் பாதிக்காத நிலை ஏற்படும். பாதுகாப்பு ஏற்பாட்டினை மட்டும் அதிகாரிகள் பார்த்துக்கொண்டால் போதும். அனைத்துப்பொருட்களும் தங்கள் வீட்டு வாசலில் கிடைக்கும்போது யாரும் சாலைகளில் சுற்ற மாட்டார்கள். அதற்கு பின்னர் அவசியம் இன்றி சுற்றுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதால் விமர்சனங்கள் இருக்காது. இதை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்றும் ஈரோடு பஸ் நிலையம் தற்காலிக சந்தையில் ஏராளமானவர்கள் குவிந்தனர். ஆனால், போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் சமூக விலகலை உறுதி செய்து, அனைவரையும் இடைவெளி வட்டங்களில் நிற்க வைத்தனர். 50 பேர், 100 பேர் என்ற எண்ணிக்கையில் சந்தைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மேட்டூர் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதி வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று, காய்கறிகள், பழங்கள் வாங்கிச்சென்றனர்.

Next Story