மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா உறுதி
மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெண் டாக்டர் உள்பட ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மதுரையை பொறுத்தமட்டில் 3 தினங்களாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. இதன்மூலம் மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25-ஆக நீடித்து வந்தது. இதில் 3 பேர் முழுவதுமாக குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களில் 3 பேர் பெண்கள், மற்ற 11 பேர் ஆண்கள். இவர்கள் அனைவரும் மதுரை கோமதிபுரம், மகபூப்பாளையம், கிரைம் பிரான்ச், ஆனையூர், யாகப்பா நகர், உசிலம்பட்டி, திருமங்கலம், கீழமாத்தூர், எழுமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அவர்களில் சிலர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்ததும், மற்றவர்கள் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் வயது 18 முதல் 62 வரை உள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.
மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுபோல் இவர்கள் வீடுகளைச் சுற்றியும் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீட்டின் அருகே உள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதல் நபர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவராவார். அவர் முதலில் ராஜபாளையத்தில் சிகிச்சை பெற்றார். அதனைதொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட உடனேயே அவரது உறவினர்கள் மற்றும் தொடர்புடைய 27 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த முதியவருக்கு முதன் முதலாக ராஜபாளையத்தில் சிகிச்சை அளித்த பெண் டாக்டருக்கும் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 2 நர்சுகளுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் முதியவரின் வீட்டில் சமையல் வேலை செய்த பெண்ணின் கணவருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே பெண் டாக்டர் உள்பட 4 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதைதொடர்ந்து இவர்களது உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கியுள்ளது. இவர்கள் வசிக்கும் பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை நேற்று நிருபர்களிடம் தெரிவித்த விருதுநகர் கலெக்டர் கண்ணன், ராஜபாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையினரையும் போலீஸ் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.
மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே மதுரையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது தாயாருக்கும், மனைவிக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் இருவருக்கும் சிகிச்சை தரப்படுகிறது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 17-ஆனது.
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 47 பேரை சுகாதாரத்துறையினர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 3 பேர் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் ஒருவரது 12 வயது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சிறுமியின் உறவினர்களான 70 வயதான முதியவருக்கும், 50 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பத்தூரை சேர்ந்த மற்றொருவரின் உறவினரான 40 வயதான ஒருவருக்கும், மற்றொரு கொரோனா நோயாளியின் தொடர்பில் இருந்த 15 வயது சிறுவனுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 10-ஆனது.
மேலும் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த நபர்களில் 21 பேர் நேற்று வீடு திரும்பினர். மேலும் அவர்கள் 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பரமக்குடியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் மனைவி மற்றும் மகனுக்கும், பரமக்குடியை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நேற்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது.
இதில் பரமக்குடியை சேர்ந்த டிரைவர், பரமக்குடியில் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளான 2 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பி வந்தபோது திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் அழைத்து வந்தவர் என்று கூறப்படுகிறது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story