காஞ்சீபுரத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அரசு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் மக்க ளுக்கு தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்று காஞ்சீபுரத்தில் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் த.உதயசந்திரன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
காஞ்சீபுரம்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனி அதிகாரிகளை நியமித்துள்ளது. அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக தமிழக தொல்லியல் துறை ஆணையரும், அரசின் முதன்மை செயலாளருமான த.உதயசந்திரன் நியமிக்கப்பட்டார்.
நேற்று மாலை, காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளின் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை வகித்தார். இதில், அரசு முதன்மை செயலாளர் த.உதயசந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
வீட்டிலேயே இருக்க வேண்டும்
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் அறிவுரையின்படி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு, தங்குதடையின்றி அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். முக கவசம், கிருமிநாசினி உபயோகப்படுத்த வேண்டும். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக தொற்றாக பரவாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும். அனைத்துறையினரும் உஷாராக இருந்து, மக்கள் நலனில் அக்கறை செலுத்தி, மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை வீட்டிலேயே இருக்க வைக்க வேண்டும்.
பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தொழிற்சாலைகளில் தங்கி பணிபுரியும் வடநாட்டு தொழிலாளர்களுக்கு தேவையான பொருட்கள், சிற்றுண்டி, சாப்பாடுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஆங்காங்கே போலீசார், தன்னார்வலர்களுடன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். கொரோனாவை தடுக்க, அனைத்து அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story