கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் - கலெக்டர் உறுதி
கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் என்று கலெக்டர் கண்ணன் கூறினார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் ராஜபாளையம் தொழிலதிபர், தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 202 தூய்மை காவலர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், தளவாய்புரம் அரிசி வியாபாரிகள் சங்கம், ராஜபாளையம் அனைத்து பலசரக்கு வியாபாரிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம் யூனியன் தலைவர் சிங்கராஜ் ஆகியோர் பங்களிப்புடன் 296 தூய்மை காவலர்களுக்கு ரூ.4.44 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் கலெக்டர் கண்ணன் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காவல்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கீழ் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு-பகல் பாராமல் பணியாற்றுகின்றனர்.
இந்த பணிகளில் முக்கிய பங்காற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை காவலர்களுக்கு உணவு, அவர்களின் பாதுகாப்பிற்காக கையுறை, முககவசம் மற்றும் கிருமி நாசினிகள் வழங்கப்படுகிறது. மேலும் குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். உடனடியாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். தங்களின் நலத்தையும், சுகாதாரத்தையும் உறுதி செய்து கொண்டு நீங்கள் பணிபுரிய வேண்டும். மேலும் இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து தூய்மை காவலர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
வெம்பக்கோட்டையில், தூய்மை காவலர்களிடம் சம்பளம் தாமதம் இன்றி கிடைக்கிறதா என கேட்டார். மதிய உணவிற்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டஅவர் அதிகாரிகளை அழைத்து ஊராட்சி நிர்வாகம் மூலம் சாப்பாடு வழங்கவேண்டும், சம்பளம் முதல் வாரத்தில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், திட்ட இயக்குனர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கரநாராயணன், வெம்பக்கோட்டை தாலுகா மண்டல அலுவலர் சவுந்தர்ராஜ், ராஜபாளையம் தாலுகா மண்டல அலுவலர் செல்வக்குமார், பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தாளாளர் சோலைச்சாமி, வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) வெள்ளைசாமி, தாசில்தார் விஜயராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயலட்சுமி சந்தானம், காத்தம்மாள், பசுபதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story