சிவகங்கை மருத்துவமனையில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடை - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


சிவகங்கை மருத்துவமனையில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடை - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 13 April 2020 10:30 PM GMT (Updated: 13 April 2020 10:29 PM GMT)

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு கவச உடைகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை, 

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கவச உடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேலிடம் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் டாக்டர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதி, உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவைகளை அரசு வழங்கி வருகிறது.

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாஸ்கரன் தனது சொந்த செலவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம், கையுறை, கிருமிநாசினி மருந்துகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சிந்து, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பு மருத்துவர் சையது முகமது, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story