ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளை தடுக்க பெங்களூருவில் 1,300 சாலைகள் மூடல் - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தகவல்


ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளை தடுக்க பெங்களூருவில் 1,300 சாலைகள் மூடல் - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தகவல்
x
தினத்தந்தி 14 April 2020 5:15 AM IST (Updated: 14 April 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளை தடுக்கவே பெங்களூருவில் 1,300 சாலைகள் மூடப்பட்டு உள்ளன என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பெங்களூருவில் பாதராயனபுரா, பாபுஜிநகர் ஆகிய 2 வார்டுகளில் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரில் பெரும்பாலான சாலைகளும் மூடப்பட்டு உள்ளன. அதாவது சாலைகள் இரும்பு தடுப்பு கம்பிகளாலும், தள்ளுவண்டிகளாலும் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

வாகனங்களை தடுக்க நடவடிக்கை

பெங்களூரு மாநகரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்து வந்தனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக சாலைகளை போலீசார் மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெங்களூரு மாநகரில் 1,300 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. சில பகுதிகளில் உள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து மரக்கிளைகளை போட்டும், கயிறுகளை கட்டியும் சாலைகளை மூடியுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி பலரும் வாகனங்களில் சுற்றித்திரிவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் அதற்காக சாலைகளில் ஒரு பாதை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story