கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்டு 14-ந்தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு - துணை முதல்-மந்திரி லட்சுமண்சவதி சொல்கிறார்
கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்டு 14-ந்தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக துணை முதல்-மந்திரி லட்சுமண்சவதி கூறியுள்ளார்.
ராய்ச்சூர்,
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த ஊரடங்கு உத்தரவை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாநில துணை முதல்-மந்திரி லட்சுமண்சவதி, கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ராய்ச்சூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவை வருகிற ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு சேவை செய்ய போக்குவரத்து துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் போக்குவரத்து உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த உதவி மையத்தை. 080-22236698, 9449863214 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
ராய்ச்சூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் மக்கள் சமூக விலகலை கடைப் பிடிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றி அனைத்து முதல்-மந்திரிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசித்துள்ளார். விரைவில் அவர் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடுவார். மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
போக்குவரத்து சேவை தொடங்குவது...
அதுபோல் நமது அண்டை மாநிலங்களிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் போக்குவரத்து சேவையை தொடங்குவது பற்றி விவாதித்து வருகிறோம். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா விரைவில் இறுதி முடிவு எடுப்பார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சொல்ல எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அவர்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
லிங்கசுகூர் தாலுகா கோதாபுரா கிராமத்தில் அசுத்த குடிநீரை குடித்த ஒருவர் வாந்தி-மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story