வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவிய இடங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு


வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவிய இடங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு
x
தினத்தந்தி 14 April 2020 3:45 AM IST (Updated: 14 April 2020 9:50 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவிய இடங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வேலூர்,

கொரோனாவின் தாக்கம் வேலூர் மாவட்டத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மற்றொரு நடவடிக்கையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளான சைதாப்பேட்டை, சின்னஅல்லாபுரம், கஸ்பா, ஆர்.என்.பாளையம், கருகம்புத்தூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக யாருக்கு பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய உள்ளோம். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தான் மற்ற பகுதிகளுக்கு பரவ அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ளவர்களை முதலில் பரிசோதனை செய்வது முக்கியமாகிறது.

அதன்படி முதல் கட்டமாக கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்கள், காய்ச்சல் மற்றும் இருமல், சளி பிரச்சினை உள்ளவர்களை கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவர்களின் குடும்பத்தினர் அதன் தொடர்ச்சியாக கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அனைவரையும் இப்பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளோம்.

இதன் மூலம் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். மற்ற பகுதிகளுக்கு பரவுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story