திருவண்ணாமலை காய்கறி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள்


திருவண்ணாமலை காய்கறி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள்
x
தினத்தந்தி 14 April 2020 4:00 AM IST (Updated: 14 April 2020 9:50 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காய்கறி கடைகள் செயல்படாது என்றதால் நேற்று காய்கறி வாங்க பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் சமூக இடைவெளியின்றி நின்று பொருட்கள் வாங்கிச்சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகள் உள்பட அனைத்தும் தடையின்றி கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனை பயன்படுத்தி தேவையின்றி சிலர் மோட்டார் சைக்கிள்களில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சுற்றினர். இதனை கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஸ்மார்ட் காப் என்ற செல்போன் செயலியை போலீசார் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்படாது என்றும், மளிகைகடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளை மூடிவைத்து டோர்டெலிவரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதனால் நேற்று காலை காய்கறிகள் வாங்க தற்காலிக காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியின்றி காய்கறிகளை வாங்கினர். பகல் 12 மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

மளிகை கடைகளிலும் மக்கள் திரண்டனர். முதியோர் உதவித்தொகை பெற வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை நகரில் போலீசார் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீசார், மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களை ஸ்மார்ட் காப் செயலி மூலம் பதிவு செய்த பின்னரே அனுப்பினர்.

Next Story