கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நோய் உடையவர்களுடன் நேரடியாக அல்லது மறைமுகமான தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் 70 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்ககூடிய அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக 14 வாகனங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாநகராட்சி அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சேலம் மண்டலத்திற்கு கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளாக டாஸ்மாக் இயக்குனர் ஆர்.கிர்லோஸ்குமார் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குனரும், தமிழ்நாடு காவல் துறை வீட்டு வசதி வாரிய தலைவருமான மஞ்சுநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று காலை சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 50-வது வார்டில் எஸ்.ஆர்.எம் தோட்டம், 59-வது வார்டில் ராபர்ட் ராமசாமி காலனி, அம்மாபேட்டை மண்டலத்தில் 33-வது வார்டில் முகமது புறா, லட்சுமி நகர் குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருமி நாசினி தெளிப்பு பணிகள், அனைத்து வகையான தொற்று நோய் தடுப்பு பணிகள், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி வழங்குதல் ஆகியவற்றை கண்காணித்தனர். மேலும் பொதுமக்களிடம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வரும் சேவைகள் மற்றும் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். பொதுமக்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியில் வராமல், வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆர்.கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி கமிஷனர் ஈஸ்வரன், உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் ஆர்.செந்தில்குமார், கே.செந்தில்குமார், சுகாதார அலுவலர் ரவிசந்தர் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story