நெல்லிக்குப்பத்தில் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை


நெல்லிக்குப்பத்தில் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 14 April 2020 12:27 PM IST (Updated: 14 April 2020 12:27 PM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லிக்குப்பம்,

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என்ற பரிசோதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் மேற்கண்ட 3 பேரின் உறவினர்கள் 13 நபர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த 13 பேருக்கு நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்த பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்த பணியை வட்டார மருத்துவ அலுவலர் வசந்த் தலைமையிலான மருத்துவக்குழுவினர் செய்தனர். மேலும் அங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று சம்பந்தமான முழு பரிசோதனையும் நடந்தது.

அப்போது மருத்துவமனைக்குள் பொதுமக்கள், மற்ற நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனை முன்பு நோயாளிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்து நின்றனர். அப்போது அங்கு 2 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் வட்டார மருத்துவரிடம் புகார் கொடுத்தனர். 13 பேருக்கு பரிசோதனை முடிந்தபிறகு அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வசந்த் கூறுகையில், அண்ணாகிராமம் வட்டாரத்திற்கு உட்பட்டு நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், குமாரமங்கலம், கீழ்அருங்குணம், ஒறையூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரானோ தொற்று நோய் சம்பந்தமாக மருத்துவ பரிசோதனை செய்வதற்கு லேப் டெக்னீசியன் ஒருவரை நியமித்து வாகனம் மூலம் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். எனவே கர்ப்பிணிகள் காலை நேரத்தில் மருத்துவமனைக்கு வராமல் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் இல்லாத நேரத்தில் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சளி, காய்ச்சல் போன்றவற்றை தொடர்ந்து யாருக்கேனும் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Next Story