கடலூர் மாவட்டத்தில் பணம் எடுக்க வங்கிகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்


கடலூர் மாவட்டத்தில் பணம் எடுக்க வங்கிகளில் குவிந்த வாடிக்கையாளர்கள்
x
தினத்தந்தி 14 April 2020 12:27 PM IST (Updated: 14 April 2020 12:27 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பணம் எடுக்க வங்கிகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

கடலூர்,

முதியோர் ஓய்வூதியத் தொகை மாநில அரசால் ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்கு பிறகு வங்கியில் செலுத்தப்படுகிறது. இதேபோல கொரோனா நிவாரண நிதியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கி கணக்கில் மத்திய அரசு பணம் செலுத்துகிறது. இந்த தொகை தற்போது வங்கிக்கு வந்துள்ளது.

அந்த பணத்தை எடுப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு பொதுமக்கள் நேற்று படையெடுத்தனர். முதியோர் ஓய்வூதிய பணம் மற்றும் கொரோனா நிவாரண நிதி ஆகியவற்றை எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் வங்கி முன்பு காத்திருந்தனர். சில இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்றிருந்தனர். சில இடங்களில் அதை கடைபிடிக்காமல் அருகருகே நின்றதால் வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

இந்த நிலையில் வங்கிக்கு கடந்த 10-ந்தேதி முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டையொட்டி வங்கிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன்காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதன் காரணமாகவும் நேற்று வங்கிகளில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் திரண்டனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அருகருகே நின்று கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. முதியோர் உதவித்தொகை மற்றும் நிவாரணத்தொகை ஆகியவற்றை எடுப்பதற்காக வங்கிகளின் முன்பு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் திரண்டு நின்றதாக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீமுஷ்ணம் இந்தியன் வங்கியில் பணம் எடுப்பதற்காக முதியோர், ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாசலில் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றர். பின்னர் போலீசார் அங்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக திரண்டனர்.

Next Story