மத்திய அரசு ரூ.500 வழங்கியதையடுத்து வங்கிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் - நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து சென்றனர்
மத்திய அரசு ரூ.500 வழங்கியதையடுத்து வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்து சென்றனர்.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. மேலும் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மருந்துக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய, மாநில அரசுகள் நிவாரணமும் வழங்கி வருகின்றன. அதன்படி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000, அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, எண்ணெய் போன்றவை இலவசமாக வழங்கி உள்ளது.
மேலும் மத்திய அரசின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிகணக்கு தொடங்கி உள்ள ஏழைகளுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இந்த மாதத்துக்கான பணம் ஜன்தன் யோஜனா திட்டத்தில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதே போல் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உதவியும் வழங்கப்பட்டு விட்டது.
இதையடுத்து இந்த பணத்தை எடுப்பதற்காக நேற்று வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தஞ்சை தெற்கு வீதியில் உள்ள பல்வேறு வங்கிகள், தொப்புள்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள வங்கி, மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள வங்கிகள், மானம்புச்சாவடியில் உள்ள வங்கி என பல்வேறு வங்கிகளிலும் மக்கள் காலை 9 மணிக்கு குவியத்தொடங்கினர். ஒரு சில வங்கிகளில் சமூக இடைவெளி விட்டு நின்றனர். பல வங்கிகளில் சமூக இடைவெளி இல்லாமல் நீண்ட வரிசையில் நின்று பணத்தை எடுத்துச்சென்றனர். பெரும்பாலான வங்கிகளில் ஆண்களை விட பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Related Tags :
Next Story