ஊரடங்கு உத்தரவால் ரூ.1 கோடி நெல்லிக்காய்கள் தேக்கம் - பறிக்காமல் மரத்திலேயே விட்ட விவசாயிகள்
ஊரடங்கு உத்தரவால் ரூ.1 கோடி மதிப்பிலான நெல்லிக்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் நெல்லிக்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விட்டனர்.
கடையம்,
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தின் தென் பகுதியான கடையம், அம்பை, திசையன்விளை, களக்காடு, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் நெல்லிக்காய் அதிக விளைச்சல் அடைந்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது நெல்லிக்காய்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் ரூ.1 கோடி மதிப்பிலான நெல்லிக்காய் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனைக்கு அனுப்புவதற்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேதனை
எனினும் பெரும்பாலான விவசாயிகள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். மேலும் சில தொழிலாளிகளே காய் பறிக்க வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட விற்பனையாகவில்லை. கடந்த ஆண்டு கிலோ 60 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் தற்போது 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் நெல்லிக்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டு விட்டனர். இதே நிலை நீடித்தால் காய்கள் அனைத்தும் மரத்தில் இருந்து விழுந்து விவசாயம் நஷ்டமடையும் சூழ்நிலை உள்ளது. ஊரடங்கு நீடிப்பதால் நெல்லிக்காய் வியாபாரி மட்டுமல்லாமல் அனைத்து சிறுகுறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
Related Tags :
Next Story